ஆதார்- பான் அட்டை இணைப்பிற்கு புதிய படிவம்: வருமான வரித்துறை தகவல்
ஏற்கனவேயுள்ள இணையதள, குறுஞ்செய்தி வசதிகளோடு நேரடியாக ஆதார் எண்ணையும் பான் அட்டையையும் இணைக்க ஒரு பக்க படிவம் ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி
எந்தவொரு தனிநபரும் ஆதார் எண், பான் அட்டை எண் இரண்டிலும் உள்ள பெயர்களை குறிப்பிட்டு வேறு பான் அட்டைகளுடன் இந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்ற உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும். மேலும் குறிபிட்டிருக்கும் பான் அட்டை எண்ணைத் தவிர அவருக்கு வேறு அட்டைகள் ஏதுமில்லை என்ற உறுதிமொழியையும் குறிப்பிட வேண்டும்.
மொபைல் சேவையில் 567678 அல்லது 56161 என்ற மொபைல் சேவை எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் ஆதார் - பான் இணைப்பை செய்து கொள்ளலாம். வருமான வரித்துறையானது புதிய பான் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை குறிப்பிடுவதற்கான வழிமுறைகளை விரிவாக கொடுத்துள்ளது. ஜூலை முதல் தேதியிலிருந்து ஆதார் பான் இணைப்பை செய்துகொள்ளாமல் இனி வரிகட்டுவது இயலாது என்றும் துறையானது கூறியுள்ளது. இணைப்பை செய்து கொள்ளாத பான்கள் செல்லுபடியாகாது என்ற செய்தியையும் அது மறுத்துள்ளது.
புதிதாக பான் அட்டைகளை விண்ணப்பிப்போர் தங்களது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டியது ஜூலை முதல் அவசியமாகும். இதுவரை 2.62 கோடி ஆதார் எண்களை பான் அட்டை தகவல்களுடன் துறையானது இணைத்துள்ளது. இதுவரை 25 கோடி பான் அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளன; அதே சமயம் 115 கோடி மக்களுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.