மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; 6 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-06-06 23:30 GMT
மண்ட்சவுர்,

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1–ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் பாலை ஊற்றியும், காய்கறிகளை கொட்டியும் அவர்கள் நூதன முறையில் போராடி வருகிறார்கள். இதனையடுத்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

6 பேர் பலி

இந்தநிலையில் மண்ட்சவுர் மாவட்டம் பிபல்யா மண்டி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்