கேரள இளைஞர் காங்கிரசார் 8 பேர் கைது

இளைஞர் காங்கிரசார் கன்று குட்டி ஒன்றை பொது இடத்தில் வைத்து வெட்டி, அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Update: 2017-06-01 23:00 GMT

கண்ணூர்,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த 27–ந்தேதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, இளைஞர் காங்கிரசார் கன்று குட்டி ஒன்றை பொது இடத்தில் வைத்து வெட்டி, அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் கண்ணூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜில் மக்குட்டி உள்பட முக்கிய தலைவர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கண்ணூர் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி பொதுச்செயலாளர் ரத்திஷ் அளித்த புகாரின் பேரில் இளைஞர் காங்கிரசார் 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களில் ரஜில் மக்குட்டியும் ஒருவர் ஆவார்.

மேலும் செய்திகள்