சத்தீஷ்காரில் நக்சலைட்டு தளபதி கொடுத்து அனுப்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 3 பேர் கைது
நக்சலைட்டு தளபதி கொடுத்து அனுப்பிய பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
தண்டேவாடா,
நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரில், அபுஜ்மாத் பிராந்திய நக்சலைட்டு தளபதியாக மல்லேஷ் என்பவர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மல்லேசுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் சிலர் தண்டேவாடா மாவட்டத்தின் கீதம் பகுதிக்கு செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பாதுகாப்பு படையினர் கீதம்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தக்கூறியபோது, நிற்காமல் தப்பி ஓட முயன்றனர். உடனே பாதுகாப்பு படையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.
அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மல்லேஷ் ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், ரூ.1 லட்சத்துக்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.