200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் சலுகை; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் சலுகை கிடைக்கும் என முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். ஆனால் மந்திரி கருத்தால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

Update: 2023-06-06 18:45 GMT

பெங்களூரு:

இலவச மின்சாரம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்ததும், தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு தலா ரூ.1,500 வழங்குவது, அன்ன பாக்கிய திட்டத்தில் தலா 10 கிலோ அரிசி வழங்குவது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வழங்குவது ஆகிய 5 திட்டங்களுக்கு மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அவற்றில் இலவச பஸ் பாஸ் திட்டம் வருகிற 11-ந் தேதியும், 200 யூனிட் இலவச மின்சார திட்டம் ஜூலை மாதம் 1-ந் தேதியும் தொடங்கப்படுகிறது.

வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்று முதல்-மந்திரி சித்த ராமையா அறிவித்தார்.

மேலும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் இலவச மின்சார திட்ட சலுகை கிடைக்கும் என்று கூறினார். கடந்த 12 மாதங்களில் ஒருவர் சராசரியாக மாதம் தலா 70 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அதைவிட கூடுதலாக 10 சதவீதம் மட்டுமே இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்றும், அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சித்தராமையா கூறினார்.

சலுகை கிடைக்காது

ஒருவேளை ஒருவர் சராசரியாக மாதம் தலா 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

வீடுகளில் 200 யூனிட்டுக்கு மேல் கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினாலும், மொத்த மின் நுகர்வுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதனால் சராசரியாக 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகிறவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை கர்நாடக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இந்த இலவச திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இந்த திட்டத்தின் சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவருக்கும் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு தற்போது அரசு நிபந்தனைகளை விதிப்பது சரியல்ல என்று மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

வாடகை வீடுகளில் வசிப்போருக்கும்...

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா, வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் இலவச மின்சார திட்ட சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். 200 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தும் ஏழை மக்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. இந்த திட்டம் வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் பொருந்தும். அதே நேரத்தில் வணிக கட்டிடங்களுக்கு இந்த திட்டத்தின் சலுகை கிடைக்காது.

பா.ஜனதா நிறைவேற்றவில்லை

இலவச திட்டங்களுக்கு நிபந்தனை விதிப்பதை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டம் நடத்த அவர்களுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது. பா.ஜனதாவினர் நீர்ப்பாசனத்துறையில் ரூ.1½ லட்சம் கோடி செலவு செய்வோம் என்றும், விவசாய கடனை தள்ளுபடி செய்வோம், விவசாயத்திற்கு தினமும் 10 மணி நேரம் மின்சாரம் வழங்குவோம் என்றும் வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றவில்லை.

நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். ஆனால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் பா.ஜனதா குறைகளை கண்டுபிடிக்கிறது. பா.ஜனதா மக்கள் விரோத கட்சி. பா.ஜனதாவினர் ஆட்சியில் இருந்தபோது கொள்ளையடித்து கர்நாடகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தினர். இப்போது எங்களுக்கு பாடம் எடுக்கும் பா.ஜனதாவை என்னவென்று சொல்வது?.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

சொத்து வரி ஆவணம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், "வாடகை வீடுகளில் வசிப்போருக்கும் இலவச மின்சார திட்ட சலுகை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால் அதற்குரிய ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது வீட்டு வாடகை ஒப்பந்தம், சொத்து வரி செலுத்தியதற்கான ஆவணம், வாடகை வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறார்கள் என்பது போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும்" என்றார்.

வீட்டு உரிமையாளர்கள் யாரும், சொத்து வரி ஆவணங்களை வழங்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. அந்த ஆவணத்தை வழங்காவிட்டால், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இலவச மின்சார சலுகை கிடைக்காது.

மக்கள் எதிர்பார்ப்பு

மொத்தத்தில் இந்த இலவச மின்சார திட்டத்தில் முதல்-மந்திரி, மின்சாரத்துறை மந்திரி மற்றும் அரசாணையில் மாறுபட்ட தகவல்கள் கூறுவதால், மக்கள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மாநில அரசு ஒரு தெளிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்