கேரளாவில் மீண்டும் ஒரு இளம்பெண் பலி...! ஆன் லைனில் பிரியாணி ஆர்டர் செய்தவர்
மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவரது சொந்த ஊர் பெரும்பாலா. இவர் டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிகப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், "இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமற்ற உணவை விற்பனை செய்த உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஏற்கனவே கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு அருந்திய பின்னர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் தரமற்ற உணவால் உயிரிழந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.