பெண் வக்கீலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

விமானத்தில் ஏற்ற மறுத்ததற்காக பெண் வக்கீலுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி இண்டிகோ விமான நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-02-06 20:47 GMT

பெங்களூரு:-

டெல்லி விமானம்

பெங்களூருவில் வசித்து வருபவர் ரேவதி ஆதிநாத் நர்தே(வயது 48). இவர் வக்கீல் ஆவார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து டெல்லி செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதற்காக அவர் அதிகாலை 4 மணிக்கே விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவர் போர்டிங் பாஸ் பெற முயன்றார். அப்போது அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் இண்டிகோ விமான நிறுவனத்தால் அமைக்கப்பட்டு இருக்கும் தானியங்கி எந்திரம் மூலம் போர்டிங் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று ரேவதியிடம் அறிவுறுத்தினர்.

அதன்பேரில் ரேவதி, அந்த எந்திரத்தில் போர்டிங் பாஸ் எடுக்க முயன்றார். ஆனால் அந்த எந்திரம் தொழில்நுட்ப கோளாறால் சரிவர செயல்படவில்லை என்று தெரிகிறது.

கடுமையாக...

டெல்லி விமானம் புறப்படும் நேரம் வந்துவிட்டதால் ரேவதி அவசர, அவசரமாக அங்கிருந்த செக்-இன் கவுண்ட்டருக்கு சென்று தனது நிலைமையை தெரிவித்தார். பின்னர் அவர்கள் போர்டிங் பாஸ் வழங்கினர். அதைக்கொண்டு அவர் விமானம் புறப்படுவதற்கு 5 நிமிடங்

களுக்கு முன்னதாக போர்டிங் கேட் அருகே சென்றார். அப்போது அங்கிருந்த விமான நிலைய ஊழியர், நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று கடுமையாக கூறி அவரை விமானத்தில் ஏற்றாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால் நொந்துபோன ரேவதி, மீண்டும் இன்னொரு இண்டிகோ விமானத்தில் ரூ.12 ஆயிரத்து 980 டிக்கெட் கட்டணம் செலுத்தி டெல்லிக்கு சென்றார்.

சேவை குறைபாடு

பின்னர் பெங்களூருவுக்கு திரும்பிய அவர் இதுபற்றி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அவர், இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை குறைபாடு தான் இப்பிரச்சினைக்கு காரணம் என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட ரேவதிக்கு அவர் 2-வதாக செலுத்திய டிக்கெட் கட்டணம் ரூ.12 ஆயிரத்து 980, நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம், மேலும் வழக்கிற்காக அவர் செலவழித்த ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரத்து 980-ஐ 45 நாட்களுக்குள் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்