டுவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு மாணவிகள் - சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை -டெல்லி மகளிர் ஆணையம்
மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை டுவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக டெல்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.;
புதுடெல்லி
சண்டிகார் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக வதந்தி பரவியது. மொத்தம் சுமார் 60 மாணவிகளின் வீடியோ இணையத்தில் லீக் ஆனதாகத் தகவல் பரவியது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள் கடந்த 17-ந்தேதி நள்ளிரவுக்குப்பின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவியும், அந்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான டுவிட்டரை தற்போது ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், கூறி இருப்பதாவது:-
20 - 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்யும் தளமாக டுவிட்டர் மாறி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோக்கள் டுவிட்டரில் அதிகம் பகிரப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.