"இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் சீராகும்!" - ரெயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா தகவல்
விபத்து நடந்த ஒடிசா பாஹநாகா ரெயில் நிலையத்தில் இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் தயாராகிவிடுமென ரெயில்வே வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.;
பாலசோர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த நிலையில், தண்டவாள் சீரமைப்பு பணிகள் குறித்து ரெயில்வே வாரிய உறுப்பினர் ஜெய வர்மா கூறுகையில், விபத்து நடந்த ஒடிசா பாஹநாகா ரெயில் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்குள் 2 ரெயில் பாதைகள் தயாராகிவிடும். இந்த 2 ரெயில் பாதைகளிலும் முதற்கட்டமாக ரெயில்கள் மெதுவாக இயக்கப்படும்.
ரெயில்வேக்கு பாதுகாப்பே முதன்மையானது. விபத்துக்குள்ளான ரெயில் அதிவேகமாக செல்லவில்லை. 'கிரீன்' சிக்னல் கிடைத்த பின்னரே ரெயில் இயக்கப்பட்டதாக பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் ரெயில் ஓட்டுநர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.