பத்ராவதி அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
பத்ராவதி அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹோலேஒன்னூர் அன்வர் காலனியை சேர்ந்தவர் நூருல்லா (வயது35). இவர் ெசன்னகிாி சாலையில் நடந்து சென்றுள்ளார். அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த பரோஸ் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் வந்துள்ளார். அப்போது நூருல்லா, பரோஸ் மோட்டார் சைக்கிள் மீது விழுந்துள்ளார். இதனால் பரோஸ், நூருல்லாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது இதனை பார்த்த அதேப்பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சலீம், 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து நூருல்லா அங்கிருந்து சென்றுள்ளார். இந்தநிலையில் ஆத்திரம் தீராத நூருல்லா, சலீம் ஓட்டலுக்கு வந்தார். பின்னர் சலீமை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
இதனை பார்த்த அருகில் இருந்த நவ்ஷத் என்பவர் தடுக்க முயன்றார். அவரையும் நூருல்லா கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவரை துரத்தி சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பி்ன்னர் நூருல்லாவை பொதுமக்கள் ஒசமனே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் நூருல்லா மதுபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.