கொலை வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண்
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பெங்களூரு, ஆக.19-
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் மகேஷ் என்ற சித்தாப்புரா மகேஷ். இவர், பிரபல ரவுடி ஆவார். கடந்த 4-ந் தேதி பெங்களுரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மகேஷ், அங்கிருந்து காரில் ஏறி ஒசரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், ரவுடி மகேசை நடுரோட்டில் வைத்து வெட்டி சாய்த்தது. இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகாவின் கூட்டாளிகள் சிலரை போலீசார் கைது செய்திருந்தார்கள்.
வில்சன்கார்டன் நாகாவின் நண்பரை மகேஷ் கொலை செய்திருந்ததால், அதற்கு பழிக்கு பழியாக சிறை அருகேயே வைத்து தீர்த்து கட்டியது தெரியவந்தது. ஆனால் வில்சன்கார்டன் நாகா உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். இந்தநிலையில், வில்சன் கார்டன் நாகா, அவரது கூட்டாளியான மோகன் நேற்று பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார்கள். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் வில்சன் கார்டன் நாகா உள்பட ரெண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.