துமகூரு அருகே பெண் போலீஸ் கொலையில் 2 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்

துமகூரு அருகே, பெண் போலீஸ் கொலையில் சக பெண் போலீஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-09-19 18:45 GMT

துமகூரு:

பெண் போலீஸ் கொலை

துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா ஹீலியார் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுதா. இவர் கடந்த 13-ந் தேதி சிக்கநாயக்கனஹள்ளி-திப்தூர் சாலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். சுதாவை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஹீலியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் சிவமொக்காவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுதாவின் சகோதரர் மஞ்சுநாத் தற்கொலை செய்து இருந்தார். அவர் எழுதி வைத்து இருந்த கடிதத்தில் தனது சகோதரி சுதா கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது கணவரை கொலை செய்து விட்டதாகவும், கள்ளக்காதலை கைவிட மறுப்பதால் அவரை கொலை செய்து விட்டதாகவும் எழுதி இருந்தார். இதனால் சுதாவை கொலை செய்து விட்டு மஞ்சுநாத் தற்கொலை செய்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையில் ஹீலியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ராணி என்ற பெண் போலீசுக்கும், நிகேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் ஹீலியார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதாவது ஹீலியார் போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்குகள் சம்பந்தமான கோர்ட்டு விசாரணைக்கு ராணி தான் ஆஜராகி வந்து உள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக கோர்ட்டு விசாரணைக்கு சுதா ஆஜராகி வந்து உள்ளார். இதுதொடர்பாக ராணி, சுதா இடையே பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராணி, சுதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

3 மாதங்களாக திட்டம் தீட்டினர்

இதுபற்றி அவர் தனக்கு தெரிந்த நிகேசிடம் கூறி இருந்தார். இதற்கிடையே கள்ளக்காதலை கைவிட மறுத்த சுதாவை கொலை செய்ய மஞ்சுநாத்தும் முடிவு செய்து இருந்ததால் சுதாவை கொலை செய்ய ராணி, நிகேஷ், மஞ்சுநாத் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக திட்டம் தீட்டி வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சுதாவை சிக்கநாயக்கனஹள்ளி கேட்டில் இருந்து திப்தூருக்கு காரில் ராணியும், நிகேசும் அழைத்து சென்றனர். அப்போது காரில் பாதி வழியில் மஞ்சுநாத்தும் ஏறினார்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து ஓடும் காரில் வைத்தே சுதாவை கத்தியால் குத்திக்கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்றது தெரியவந்தது. போலீஸ் விசாரணைக்கு பயந்து மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்து உள்ளது. கைதான ராணி, நிகேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்