சித்ரதுர்காவில் போலி நகைகளை விற்ற 2 பேர் கைது

சித்ரதுர்காவில் ரூ. 44 லட்சம் போலி நகையை தொழிலாளியிடம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 18:45 GMT

தாவணகெரே-

சித்ரதுர்காவில் ரூ. 44 லட்சம் போலி நகையை தொழிலாளியிடம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தங்க புதையல்

விஜயநகர் மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா பாவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). அதேப்பகுதியை சேர்ந்தவர் ஈசுவரப்பா (34). இவர்கள் நண்பர்கள் ஆவர். சதீஷ், ஈசுவரப்பா ஆகிய 2 பேருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டம் சிக்கசேமனஹள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

அப்போது, சதீஷ், ஈசுவரப்பா ஆகியோர் தங்களிடம் தங்க நகைகள் இருப்பதாக கோவிந்தராஜிடம் கூறினர். மேலும் அந்த நகைகள் வீட்டில் குழி தோண்டு்ம் போது புதையலில் கிடைத்தது. அந்த புதையலில் இருந்த தங்க நகைகள் எனவும், நகையை பாதி விலைக்கு கொடுப்பதாகவும் அவரிடம் தெரிவித்தனர். இதனை கோவிந்தராஜ் நம்பினார்.

தங்க நகைகள் விற்பனை

இதையடுத்து, கோவிந்தராஜ், அவர்களிடம் நகையை நான் விற்று கொடுக்கிறேன் என கூறினார். இதையடுத்து அவர் நகையை விற்பனை செய்ய நம்பிக்கையான ஆட்களை தேடி வந்தார். ஆனால் கோவிந்தராஜுக்கு நகைகள் வாங்குவதற்கு ஆட்கள் யாரும் கிடைக்கவில்லை. இதனால் நகையை அவரே வாங்க முடிவு செய்தார். இதுகுறித்து கோவிந்தராஜ், சதீஷ், ஆகியோரிடம் கோவிந்தராஜ் கூறினார்.

இதையடுத்து, அவர்கள் கோவிந்தராஜை தாவணகெரே மாவட்டம் சன்னகிரிக்கு ரூ. 44 லட்சம் கொண்டு வரும்படி கூறினர். இதையடுத்து கோவிந்தராஜ் சன்னகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு வந்த 2 பேரிடம் கோவிந்தராஜ் ரூ. 44 லட்சம் ரொக்கத்தை கொடுத்து தங்க நகைகளை வாங்கினார். பின்னர் அதனை கோவிந்தராஜ் சோதனை செய்தபோது அந்த நகைகள் போலியானது என தெரியவந்தது.

ஏமாற்றம்

இதையடுத்து கோவிந்தராஜ், சதீசின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரின் எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதையடுத்து கோவிந்தராஜ் சன்னகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். மேலும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், விஜயநகரில் ஈசுவரப்பா, சதீஷ் ஆகிய 2 பேரும் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்ப இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பி்ன்னர் ஈசுவரப்பா, சதீஷ் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்