நகைக்கடையில் கொள்ளை வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை; உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு

நகைக்கடையில் கொள்ளை வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-02-18 18:45 GMT

மங்களூரு:

நகைக்கடையில் கொள்ளை

உடுப்பி மாவட்டம் கார்கலாவில் ராமசந்திர மானே என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நகைக்கடையில் புகுந்த மர்மநபர்கள், ஊழியர்களின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.42.67 லட்சம் மதிப்பிலான 1½ கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கார்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்கலா அருகே பண்டிமேட்டை சேர்ந்த மதுகர் ஆச்சார்யா (வயது 36), குந்தாப்புராவை சேர்ந்த பிரசாந்த் ஆச்சார்யா (36), சாகித் அலி, சந்திரா ஆச்சார்யா, மோகன் மொகவீரா, சந்தீப் மொகவீரா ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அந்த வழக்கில் கார்கலா போலீசார் உடுப்பி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடக்கும்போதே, மோகன் மொகவீரா, சந்தீப் மொகவீரா ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் அவர்கள் 2 பேரும் கொள்ளை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ேமலும், சாகித் அலி மற்றும் சந்திரா ஆச்சார்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தினேஷ் ஹெக்டே தீர்ப்பு வழங்கினார். இதில், மதுகர், பிரசாந்த் ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்