விபத்தில் சிக்கிய காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி
மைசூருவில், மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான ேசாக சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:
மைசூருவில், மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான ேசாக சம்பவம் நடந்துள்ளது.
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்
மைசூரு டவுனில் அசோகபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை ஒரு கார் வேகமாக சென்றது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் கவிழ்ந்தது. மேலும் கார் மோதியதில் சிமெண்டு மின்கம்பம் உடைந்துடன் மின்வயரும் அறுந்து விழுந்துள்ளது.
கவிழ்ந்து கிடந்த காரில், அதில் பயணம் செய்தவர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். உடனே அந்தப் பகுதியை சேர்ந்த 4 பேர் ஓடி வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றனர்.
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
அந்த சமயத்தில் 4 பேரும், அறுந்துகிடந்த மின்வயரை கவனிக்காமல் மிதித்துள்ளனர். இதில் 4 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த கிரண், ரவி ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உணவு விற்பனை பிரதிநிதி உள்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். பின்னர் மின் ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பெரும் சோகம்
மேலும் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக அசோகபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்துக்குள்ளான காரில் சிக்கியவர்களை மீட்க சென்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.