திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

ருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2022-08-20 08:54 GMT

திருப்பதி ,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னால் முதல்-அமைச்சர் எடியூரப்பா மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட விஐபிகள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ஏற்கனவே ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ஆனால் ஆந்திர மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் தேவஸ்தான அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு தரிசனத்திற்கு வருகின்றனர். வி.ஐ.பி. தரிசனத்தின் போது சாதாரண பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 30 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

இலவச தரிசன வரிசையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும் போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களை ஒழுங்குபடுத்தினர். தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று ரூ.4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

 

Tags:    

மேலும் செய்திகள்