வாலிபர் மர்ம சாவு வழக்கு வனத்துறை ஊழியர்கள் 2 பேர் கைது

சிக்கமகளூருவில் வனத்துறை அலுவலகத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் வனத்துறை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டு உத்தரவின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 18:45 GMT

சிக்கமகளூரு:

வாலிபர் மர்ம சாவு

=சிக்கமகளூரு மாவட்டம் சக்கராயப்பட்டணா போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்லாலே கோட்டை வனப்பகுதியில் மூங்கில் மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சிவமொக்காவை சேர்ந்த ரவி (வயது 30) என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் ரவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனத்துறை அலுவலகத்தில் இருந்த கழிவறையில் ரவி பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்த ரவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினர் தாக்கியதால் தான் ரவி இறந்ததாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து சிக்கமகளூரு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

2 பேர் கைது

இந்த வழக்கு விசாரணை சிக்கமகளூரு மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரவியை கைது செய்தபோது, பணியில் இருந்த 4 வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சக்கராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நந்திபெட்டலு வனத்துறை ஊழியர்களான சுனில் (34), நந்திஸ் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். வசந்த், சந்துரு ஆகிய 2 வனத்துறை ஊழியர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்