கர்நாடகத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் பெயர் சூட்டல்
சந்திரயான்-3 திட்டம் வெற்றியை நினைவுகூரும் வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
யாதகிரி:-
சாதித்த இந்தியா
நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் 4-வது நாடு என்ற பெருமையை உலக அரங்கில் இந்தியா பெற்றது.
மேலும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தையும் இந்தியா பிடித்து விண்வெளியில் வல்லரசு என நிரூபித்துள்ளது.
இந்த நிலையில் சந்திரயான்-3 திட்ட வெற்றியை நினைவுகூரும் வகையிலும், இஸ்ரோ விஞ்ஞானிகளை கவுரவப்படுத்தும் வகையிலும் கர்நாடகத்தை 2 குழந்தைகளுக்கு பெற்றோர் 'விக்ரம்', 'பிரக்யான்' பெயரை சூட்டி உள்ளனர்.
விக்ரம், பிரக்யான் பெயர் சூட்டல்
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகெரேபகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன். இவரது மகன் பாலப்பா, மற்ெறாரு மகன் நிங்கப்பா. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் பாலப்பா-நாகம்மா தம்பதிக்கு கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இதேபோல், கடந்த 18-ந்தேதி நிங்கப்பா-சிவம்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து பாலப்பா-நாகம்மா தம்பதி தங்கள் குழந்தைகளுக்கு 'விக்ரம்' என்றும், நிங்கப்பா-சிவம்மா தம்பதி தங்கள் மகனுக்கு 'பிரக்யான்' என்றும் பெயர் சூட்டினர். அந்த தம்பதிகளை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
விஞ்ஞானிகளை கவுரவப்படுத்தும்...
இதுகுறித்து மெய்யப்பன் கூறுகையில், நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக நமது இந்திய விஞ்ஞானிகள் கடும் பாடுபட்டுள்ளனர்.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், விஞ்ஞானிகளை கவுரவப்படுத்தும் விதமாகவும் எனது மூத்த பேரனுக்கு விக்ரம் என்றும், 2-வது பேரனுக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம் என்றார்.