வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மதுபோதையில் கல்வீசிய 2 பேர் கைது

அவர்கள் மதுபோதையில், விளையாட்டுக்காக ரெயில் மீது கல்வீசியது விசாரணையின்போது தெரிந்தது.

Update: 2023-11-29 01:19 GMT

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், குறிப்பிட்ட தொலைவை மக்கள் விரைவாக சென்றடைய முடிகிறது.

இந்த நிலையில், ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி 20835 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவின் தேன்கனல்-அங்குல் ரெயில்வே பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை மாலை சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது கற்களை வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுபற்றி பணியில் இருந்த ரெயில்வே போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

ரெயில்வே பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் கட்டாக்கில் இருந்து சம்பவ பகுதிக்கு உடனடியாக புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி ரெயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் பற்றி உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை கண்டறியும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கிழக்கு கடலோர ரெயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ரெயில் மீது கல்வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி தல்சேர் பகுதியின் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்ற புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை குர்தா சாலை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ரெயில் தண்டவாளம் அருகே தனித்த இடத்தில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், ரெயில் மீது அவர்கள் கல்வீசியது தெரிய வந்தது.

அவர்கள் மதுபோதையில், விளையாட்டுக்காக ரெயில் மீது கல்வீசியது விசாரணையின்போது தெரிந்தது. இதனை அவர்கள் ஒப்பு கொண்டனர். அதன்பின் அவர்கள் இருவரையும் தேன்கனல் பகுதியில் உள்ள கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

நாட்டின் பிற பகுதிகளில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கடந்த காலங்களிலும் இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், பயணிகள் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்