183 சிறுவர், சிறுமிகள் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்பு; ரெயில்வே பாதுகாப்பு படை அதிரடி
ரெயில்வே பாதுகாப்பு படையினர் மனித கடத்தலில் இருந்து மொத்தம் 183 சிறுவர் சிறுமிகளை கடந்த ஒரு மாதத்தில் மீட்டு உள்ளனர்.;
புதுடெல்லி,
நாட்டின் மிக பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரெயில்வே உள்ளது. இதில், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனித கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்தி கொள்கின்றனர். தங்களிடம் சிக்கும் நபர்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்த செலவில், அதிக தொலைவுக்கு பயணம் செய்து, கடத்தி செல்வதற்கு ரெயில்வேயை பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதனை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில்) கடத்தல்காரர்களிடம் இருந்து 2,178 பேரை மீட்டுள்ளனர்.
குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் என பாதுகாப்பும், கவனமும் தேவைப்பட்ட 65 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு உதவிகளையும் செய்து அவர்களை துயரில் இருந்து மீட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலையில், சிறப்பு ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டது.
இதற்காக அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து படையினர் பணிபுரியும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. உடனுக்குடன் கடத்தல் வழக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் செயலாற்றுவது, கடத்தல்களை கண்டறிவது ஆகிய பணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.
இதன்படி, 151 சிறுவர்கள், 32 சிறுமிகள் மற்றும் 3 பெண்களை கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர். இதனுடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 47 பேரை கைது செய்து உள்ளனர்.
இந்த கடத்தல்களுக்கு பின்னர், குறிப்படும்படியாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், விபசாரம், கொத்தடிமை தொழிலுக்கு தள்ளுவது, கட்டாய திருமணம், வலுகட்டாய அடிப்படையில் அடிமைகளாக வீட்டு வேலையில் ஈடுபடுத்துதல், தத்து கொடுத்தல், பிச்சை எடுத்தல், உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் போதை பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு அவர்களை பயன்படுத்தி கொள்ளும் குற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதும், பெருமளவில் மனித உரிமைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதும் தெரிந்த ஒன்றாகும்.