நாட்டில் 3 ஆண்டுகளில் 1,800 குழந்தை தொழிலாளர்கள் வழக்குகள் பதிவு
நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1,800-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர் வழக்குகள் பதிவாகி உள்ளன என மக்களவையில் அரசு இன்று தெரிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் விஜய் பாகெல் மற்றும் உபேந்திரா சிங் ராவத் ஆகியோர், நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் வழக்குகள் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை மந்திரி ரமேஸ்வர் தெளி அவையில் இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், நாட்டில் 1986, குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 1,861 வழக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவித்து உள்ளார்.
இதன்படி, 2019-ம் ஆண்டில் 772 வழக்குகளும், 2020-ம் ஆண்டில் 476 வழக்குகளும் மற்றும் 2021-ம் ஆண்டில் 613 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இவற்றில் தெலுங்கானா அதிக அளவாக 685 வழக்குகளை கொண்டுள்ளது. அதற்கு அடுத்து அசாம் (186) உள்ளது. மிக குறைந்த அளவாக அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒரேயொரு வழக்கு உள்ளது. அதற்கு அடுத்து சத்தீஷ்கார், மேகாலயா, டாமன் மற்றும் டையூ மற்றும் பிற மாநிலங்களில் 2 வழக்குகள் உள்ளன.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பன்முக செயல் திட்டங்களை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை, புனரமைப்பு, இலவச கல்வி உரிமை மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து, இந்த வழக்குகளை கட்டுப்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறையை நீக்க பல்வேறு சட்டங்களும் உள்ளன என உறுப்பிர்களிடம் அவர் தெரிவித்து உள்ளார்.