ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்ததால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு ஆளும் கட்சியான முக்தி மோர்ச்சா கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது. மேலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பின்னர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்ததால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். முன்னதாக நேற்று இரவு பல பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.