நாட்டில் வீடு இல்லாத நபர்களின் எண்ணிக்கை 17.72 லட்சம்: மத்திய அரசு தகவல்

நாட்டில் வீடு இல்லாத நபர்களின் எண்ணிக்கை 17.72 லட்சம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்து உள்ளது.

Update: 2022-12-19 13:01 GMT



புதுடெல்லி,


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மேலவையில் உறுப்பினர் பி.வி. அப்துல் வஹாப் என்பவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதில், நாட்டில் வீடு இல்லாத நபர்களை பற்றி மத்திய அரசு கடந்த காலங்களில் ஆய்வு எதுவும் செய்து இருக்கிறதா? நாட்டில் வீடு இல்லாத நபர்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அரசு வைத்திருக்கிறதா? என கேட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு, நாட்டில் வீடில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பது உண்மையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு விவகார துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி எழுத்துப்பூர்வ பதிலளித்து உள்ளார். அதில், 2019-ம் ஆண்டில் இருந்து, வீடில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்தோ அல்லது குறைந்தோ உள்ளது பற்றிய தகவல்கள் அரசிடம் இல்லை.

ஆனால், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாட்டில் வீடு இல்லாத நபர்களின் எண்ணிக்கை மொத்தம் 17,72,889 என தெரிவித்து உள்ளார்.

இவற்றில் நகர்ப்புறங்களில் 9,38,348 பேரும், கிராமப்புறங்களில் 8,34,541 பேரும் உள்ளனர். வீடின்றி அதிக அளவில் தெருக்களில் வசிக்கும் மக்களின் வரிசையில் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

இதன்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என சேர்த்து உத்தர பிரதேசத்தில் வீடற்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 3,29,125 ஆகும். இதனை தொடர்ந்து மராட்டியத்தில் 2,10,908 பேர், ராஜஸ்தானில் 1,81,544 பேர், மேற்கு வங்காளத்தில் 1,34,040 பேர், மத்திய பிரதேசத்தில் 1,46,435 பேர், ஆந்திர பிரதேசத்தில் 1,45,211 பேர் மற்றும் குஜராத்தில் 1,44,306 பேர் உள்ளனர் என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்