கோர்ட்டு விசாரணைக்கு சென்ற பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி கால்வாயில் பிணமாக மீட்பு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி வழக்கு விசாரணைக்காக கோர்ட்டிற்கு சென்றுள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் சந்தனா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக கடந்த 18-ம் தேதி அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணமல் போன சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கோர்ட்டு விசாரணைக்காக கடந்த 18-ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய அந்த சிறுமி இன்று சீதாபூர் மாவட்ட எல்லையில் உள்ள காசிபூர் பிஹ்டா என்ற கிராமத்தில் உள்ள கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி தான் அவரை கொலை செய்து கால்வாயில் வீசி சென்றுள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோர்ட்டு விசாரணைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.