மத பாடசாலையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் பரபரப்பு புகார்
மத பாடசாலையில் படித்த மாணவி கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக நிர்வாகம் மீது பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அருகே உள்ள பீமா பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகுமத் பீவி. இவருடைய மகள் அஸ்மியாமோள் (வயது 17). இவர் பாலராமபுரத்தில் உள்ள ஒரு மத பாடசாலையில் தங்கி படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பெற்றோரை தொடர்பு கொண்டு அஸ்மியாமோள் பேசினார். அப்போது தன்னை உடனடியாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
தற்கொலை
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றனர். ஆனால் மாணவியை சந்திக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோர் திரும்பி சென்று விட்டனர்.
பிறகு சிறிது நேரம் கழித்து மாணவியின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடசாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அதாவது, உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளனர். இதை கேட்டு மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.
சாவில் சந்தேகம்
இதற்கிடையே போலீசார் மதபாடசாலை கழிப்பறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அஸ்மியாமோள் உடலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளது மரணத்திற்கு அவள் படித்து வந்த பாடசாலை நிர்வாகமே காரணம் என பாலராமபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த பக்ரீத் பண்டிகை விடுமுறைக்கு மகள் வீட்டுக்கு வந்திருந்த போது பாடசாலை நிர்வாகம் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியதாக குற்றம்சாட்டினர்.
மாணவி சாவு குறித்து பாலராமபுரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.