திருட்டு வழக்கில் நேபாளத்தை சேர்ந்த 17 பேர் கைது

பெங்களூருவில் திருட்டு வழக்கில் நேபாளத்தை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது.

Update: 2023-03-11 20:27 GMT

பெங்களூரு:-

நேபாள தம்பதி

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கிரண். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த தம்பதி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் கிரண் குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்றனர். அப்போது கிரண் மட்டும் வீட்டில் இருந்தார். அந்த சமயத்தில் நேபாள தம்பதி வீட்டில் இருந்த 1¾ கிலோ தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கிரண், ஜே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஜே.சி.ரோடு பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன் என்ற தொழில் அதிபர் வீட்டில் வேலை செய்த நேபாள பெண், அவரது வீட்டில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு தப்பி சென்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் டெல்லி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தி வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட நேத்ரா, லட்சுமி, பகதூர், பீம், அஞ்சலி, அபேஷ் சாகி, பிரசாந்த், பிரகாஷ் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும், 2 துப்பாக்கிகள், தங்க கட்டிகள், ரூ.77 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.2 கோடி பொருட்கள்

பெங்களூரு ஜெயநகர் பகுதியை சேர்ந்த ஒபேதுல்லா கான் ஓய்வுபெற்ற வனக்கண்காணிப்பாளர் வீட்டில் புகுந்து 292 கிராம் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், 9 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 292 கிராம் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய், 168 கிராம் வெள்ள பொருட்கள், 18 கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை மீட்டனர். இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிருஷ்ணகாந்த் கூறுகையில், பெங்களூருவில் வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நேபாள கும்பலை சேர்ந்த 17 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்