2022 ஆண்டு நாடுமுழுவதும் சாலை விபத்துகளில் 1.6 லட்சம் பேர் பலி - மத்திய மந்திரி தகவல்
தலைக்கவசம், சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருத்தல் போன்ற காரணங்களால் விபத்துகள் நடந்துள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் சாலை விபத்துக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் 1,53,972 ஆகவும், 2020ல் 1,38,383 ஆகவும் இருந்தது. அதேபோல், 2022-ம் ஆண்டில் 4,61,312 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 2021ல் 4,12,432 சாலை விபத்துகளும், 2020ல் 3,72,181 சாலை விபத்துகளும் நடந்துள்ளன. கடந்த ஆண்டு அதிகபட்சமாக உ.பி.யில் 22,595 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 17,884, மராட்டியத்தில் 15,224, ம.பி.யில் 13,427, கர்நாடகாவில் 11,702, டெல்லியில் 1,461 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
அதி வேகமாக கார் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்துதல், போதையில் வாகனத்தை இயக்குதல், தவறான பாதையிலும், ஒழுங்கீனமாகவும் வாகனங்களை இயக்குதல், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிவதைக் கண்டுகொள்ளாது இருத்தல், தலைக்கவசம், சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருத்தல், வாகனங்களின் மோசமான நிலைமை, மோசமான வானிலை மற்றும் சாலை, வாகனம் இயக்குபவர்கள், சாலையில் நடந்து சென்றவர்களின் தவறு காரணமாக சாலை விபத்துகள் நடந்தன என தெரிவித்துள்ளார்.