தினசரி 14 மணி நேரம் வேலை: கர்நாடக அரசு புதிய சட்டம்?
தினசரி 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்று ஐ.டி. ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினசரி 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் இது பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆட்குறைப்பிற்கும் காரணமாக அமையலாம் என்றும் ஐ.டி. ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐ.டி. நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்றுக் கர்நாடகா அரசு அம்மாநிலத்தின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961ஐ திருத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 12 மணி நேரம் வேலை நேரம் கூடுதலாக 2 மணி நேரம் ஓவர் டைம் என்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி தேவை என்பதே இப்போது அங்குள்ள ஐடி நிறுவனங்களின் முன்மொழிவாக இருக்கிறது. தற்போது தொழிலாளர் சட்டங்களின்படி 10 மணி நேரம் கூடுதலாக 2 மணி நேரம் ஓவர் டைம் இருக்கும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டும் என்பதே ஐடி நிறுவனங்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.