வீடு இடிந்து விழுந்ததில் புதுமண தம்பதி உள்பட 13 பேர் படுகாயம்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பத்ராவதி அருகே, வீடு இடிந்து விழுந்ததில் புதுமண தம்பதி உள்பட 13 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2022-07-27 14:24 GMT

சிவமொக்கா;

புதுமண தம்பதி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹரதொலளு கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் விருந்திற்காக மணமகளின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு புதுமண தம்பதி உள்பட உறவினர்கள் அனைவரும் இரவு விருந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென்று அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி புதுமண தம்பதி உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கிய 13 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஒலேஹொன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவமொக்கா எம்.எல்.ஏ. அசோக் நாயக், பத்ராவதி தாசில்தார் பிரதீப் மற்றும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்