மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 12-ந்தேதி நடை திறப்பு
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 12-ந்தேதி நடை திறக்கப்பட உள்ளது.;
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
சபரிமலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20-ந்தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் கடந்த சீசனில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதன்மூலம் ரூ.380 கோடி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்தது. ஆனால் சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் இன்னும் எண்ணி கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது.
அந்த நாணயங்களை எண்ணுவதற்காக, தேவஸ்தானத்தின் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானம் சென்றுள்ளது. அவர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியை தொடங்கி உள்ளனர். ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்னதாக (அதாவது 11-ந்தேதி) காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.