காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள்; 31 வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 123 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகி உள்ளதுடன் 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-12-07 11:55 GMT



ஜம்மு,


நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பேசும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு ஆண்டில் (நவம்பர் வரை) 123 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 31 வீரர்கள் பணியின்போது உயிரிழந்து உள்ளனர்.

பொதுமக்களிலும் 31 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 180 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் பெரிய அளவில் குறைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.

2018-ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 417 ஆக இருந்தது. இது, 2021-ம் ஆண்டில் 229 ஆக குறைந்தது. 2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் 3 காஷ்மீரி பண்டிட்டுகள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் 14 பேர் காஷ்மீரில் கொல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்