போதைப்பொருள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது; ரூ.2¾ லட்சம் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்

அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி போதைப்பொருள் பயன்படுத்திய தனியார் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2¾ லட்சம் கஞ்சா, செல்போன்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-09 15:14 GMT

மங்களூரு;

கேரளாவை சேர்ந்தவர்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் தனியார் கல்லூரிகள் அதிகம் உள்ளன. இந்த கல்லூரிகளில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் கல்லூரிகளின் அருகில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மங்களூரு டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ள மாணவர்கள் சிலர் கஞ்சா புகைப்பதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


அந்த தகவலின் பேரில் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள அறையில் தங்கி இருந்த சிலர் கஞ்சா பயன்படுத்தி கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம், கண்ணூர், கோழிக்கோடு போன்ற பகுதிகளை சேர்ந்த அல்கிரீஷ் (வயது 21), முகமது ரிசின் (22), சாஹீத் (22), அபிஷேக் (21), அனந்து (18), சரோன் ஆனந்து (19), முகமது ரசீன் (21), சனோப் அப்துல் கபூர் (22), கோகுல் கிருஷ்ணன், ரிசின் ரியாஸ் (22), பகத்ஹபீப் (22), நிடல் அப்துல் அஜீஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

அவர்களை மருத்துவசோதனைக்கு உட்படுத்தியதில், அவர்கள் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர்கள் அறையில் கூட்டாக சேர்ந்து கஞ்சா புகைத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சா, ரூ.4,500 ரொக்கம், 11 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2¾ லட்சமாகும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்