நாடு முழுவதும் 11½ கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதுமத்திய அரசு தகவல்
உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.;
புதுடெல்லி,
உலக தண்ணீர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் போன்றவற்றின் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதன்படி நாடு முழுவதும் 11.49 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைப்போல 1.53 லட்சம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 9.34 லட்சமாக அதிகரித்து இருக்கும் நிலையில், 9.02 லட்சம் பள்ளிகளும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக அரசு கூறியுள்ளது. கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் ரூ.32,912.40 கோடி செலவில் 409 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் 232 திட்டங்கள் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
தண்ணீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக ஜல்ஜீவன், அடல் புஜல் யோஜனா உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.