கேரளாவில் பெண் துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு

கேரளாவில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு விழுந்தது.

Update: 2023-07-28 22:15 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் பருவ மழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்தது. இதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பருவ மழைக்கால லாட்டரி விற்பனைக்காக 27 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டன.

ஒரு லாட்டரி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. பம்பர் பரிசு ரூ.10 கோடி என்பதால், லாட்டரி சீட்டுகள் விறுவிறுப்பாக விற்பனையானது. இந்தநிலையில் நேற்று முன்தினம் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது.

பின்னர் அந்த லாட்டரியை மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் பிந்து, ஸ்ரீஜா, லீலா, ரஷ்மி, கார்த்தியாயனி, ராதா, குட்டிமாளு, பேபி, சந்திரிகா, பார்வதி, சோபா ஆகிய 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது. இதை அறிந்த அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து லாட்டரி சீட்டை பரப்பனங்காடியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்து உள்ளனர். லாட்டரி குலுக்கலில் பம்பர் பரிசை வென்ற துப்புரவு பணியாளர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் பரப்பனங்காடி நகராட்சியில் குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் 11 பேரும் பரப்பனங்காடியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது பாலக்காட்டில் உள்ள ஏஜென்சியை சேர்ந்த விற்பனையாளர் அங்கு வந்தார். அவர் லாட்டரி சீட்டு வாங்குமாறும், ஒரு சீட்டின் விலை ரூ.250 என்றும் கூறினார். இதையடுத்து நாங்கள் 11 பேரும் சேர்ந்து ஒரே ஒரு லாட்டரி சீட்டு வாங்க முடிவு செய்தோம்.

அதன்படி, 9 பேர் தலா ரூ.25, 2 பேர் தலா ரூ.12.50 (ரூ.25) என ரூ.250 செலுத்தி லாட்டரி சீட்டு வாங்கினோம். இறுதியில் நடந்த குலுக்கலில் நாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்தது. இந்த தொகையை நாங்கள் பங்களித்த தொகைக்கு ஏற்ப பிரித்து எடுத்துக்கொள்ளப்போகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்