நர்சரி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவே மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.100 வசூல்

நர்சரி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவே அரசு பள்ளி மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.100 வசூலிக்கப்படுவதாக மந்திரி பி.சி.நாகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-10-22 18:45 GMT

மைசூரு:

ரூ.100 கட்டணம் வசூல்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இலவச கல்வி வழங்கக்கூடிய அரசு, மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.100 வசூலிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக அரசு பள்ளி மாணவர்களிடம் மாதந்தோறும் ரூ.100 வசூலிப்பதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மைசூருவில் மந்திரி பி.சி.நாகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் ரூ.100 வசூல் செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இது மாநில அரசுக்காக வசூல் செய்யவில்லை. மேலும் இந்த கட்டணத்திற்கும் மாநில முதல்-மந்திரி, கல்வித்துறை மந்திரி யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இந்த கட்டணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டேன். அவர்கள் அரசு பள்ளியில் புதியதாக நர்சரி மற்றும் எல்.கே.ஜி, யு.கே.ஜி. தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஊதியம்

இந்த வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்குவது இல்லை. மாணவர்களிடம் வசூல் செய்யும் ரூ.100 கட்டணத்தை வைத்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தில் இதற்கு இடம்

உள்ளது. அதன்பேரில் எஸ்.டி.எம்.சி. கமிட்டி இந்த கட்டணத்தை விதித்துள்ளனர்.

ஆனால் பெற்றோர் கட்டாயமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. விருப்பம் இருப்பவர்கள் கொடுக்கலாம். அதேபோல இந்த கட்டணத்தை வசூல் செய்து யாரேனும் மோசடி செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வாய்க்கு வந்தப்படி பேசி வருகிறார். முதலில் கல்வி உரிமை சட்டத்தை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்