கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 10 ஆயிரத்து 38 பேர் சாவு

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) நடந்த விபத்துகளில் 10 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.

Update: 2022-06-23 21:29 GMT

பெங்களூரு:

விபத்து உயர்வு

கர்நாடக மாநில குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் மாநிலத்தில் நடைபெறும் விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு மாநிலத்தில் நடந்த விபத்துகள் பற்றி மாநில குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக சில மாதங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த ஆண்டில் மாநிலத்தில் விபத்து சற்று குறைந்து இருந்தது. 2020-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 34,178 விபத்துகள் நடந்து இருந்தன. இதில் 9,760 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு (2021) மாநிலத்தில் விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

10 ஆயிரத்து 38 பேர் சாவு

கடந்த ஆண்டில் மாநிலத்தில் 34 ஆயிரத்து 647 விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகளில் 10 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் தினமும் விபத்துகளில் 27 பேர் உயிரிழந்து இருந்தனர். பெங்களூருவில் 3,213 விபத்துகளும், துமகூருவில் 2,020 விபத்துகளும் நடந்து இருந்தன. அதிகபட்சமாக பெலகாவியில் 684 பேரும், பெங்களூருவில் 654 பேரும் உயிரிழந்தனர். அதிக விபத்துகளில் சிக்கியது இருசக்கர வாகனங்கள் தான். அந்த வாகனங்கள் 55 சதவீத விபத்துகளை சந்தித்து உள்ளது. இருசக்கர வாகனங்கள் சென்று விபத்தில் சிக்கி 4,938 பேர் உயிரிழந்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலோனார் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்