பழிக்கு பழியாக 10 பேர் உயிருடன் எரித்து கொலை; 7 பேரை கைது செய்தது சி.பி.ஐ.

மேற்கு வங்காளத்தில் பழிக்கு பழியாக 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை சி.பி.ஐ. கைது செய்து உள்ளது.

Update: 2022-08-23 14:43 GMT



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் போக்துய் கிராமத்தில் வசித்து வந்தவர் பாது ஷேக். இவர் தலைமையிலான குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் இடையே கிராமத்தில் மோதல் நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில், போக்துய் மோர் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 60ல் பாது ஷேக் வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்து பின்பு உயிரிழந்து உள்ளார். இதனால், போக்துய் மோர் பகுதியிலும், சுற்று வட்டாரத்திலும் பதற்றம் தொற்றி கொண்டது.

இதன் தொடர்ச்சியாக ஷேக்கின் ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளிகள் போக்துய் கிராமத்தில் எதிரி குழுக்களை தேடி சென்றுள்ளனர். அவர்களது வீடுகளை முற்றுகையிட்டனர். பின்னர், வீடுகளில் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இருக்க கூடும் என்ற அடிப்படையில் வீடுகளை தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர்கள் எரிந்து போயுள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றனர். பின்பு அவர்களில் ஒரு பெண் உயிரிழந்து விட்டார். பீர்பும் படுகொலை என அறியப்பட்ட இந்த சம்பவம் கடந்த மார்ச் 21-ந்தேதி நடந்தது.

அடுத்த நாள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் கீழ், மார்ச் 25-ந்தேதி 22 குற்றவாளிகள் மற்றும் பிறருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதன்பின்னர் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது.

இந்த வழக்கில் 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர், ஜூன் 20-ந்தேதி 2 சிறுவர்கள் உள்பட 16 குற்றவாளிகள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கண்டறியும் பணியும் நடந்து வந்தது. அதில், பிகிர் அலி, நூர் அலி, ஷேர் அலி என்ற காலோ, ஆசிப் ஷேக் ஜோசிப் உசைன், ஜமிருல் ஷேக் என்ற உஜிர், கைருல் ஷேக் ஆகிய 7 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் ராம்புர்ஹாட் நகரில் உள்ள கோர்ட்டில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர். பழிக்கு பழியாக 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்