மாந்தோப்பில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி - மேற்குவங்காளத்தில் பயங்கரம்
மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.;
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் முரிஷிபாபாத் மாவட்டத்தில் மாந்தோப்பில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். கபஷ்டங்கா கிராமத்தை சேர்ந்த ஆலம் ஷேக் (வயது 26) என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாந்தோப்பில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த ஆலம் ஷேக் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சமப்வத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மேற்குவங்காளத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.