அதிக பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதாக ரூ.15 லட்சம் மோசடி: போலி மந்திரவாதி கைது

அதிக பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்த போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-17 21:40 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது38). இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, கொல்லம் மாவட்டம் புனலூரில் 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதுடைய ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.

கணேசன் சில நாட்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றார். அங்கு சரியான வேலை கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின்பு சிறு சிறு மந்திரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நரிக்கல் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரிடம் அதிக பணம் சம்பாதிக்க மந்திரவாதம் மூலம் வழிகாட்டுவதாக கூறி ரூ.80 ஆயிரம் வாங்கியுள்ளார். அதன்பின்பு பல நாட்கள் கடந்த பின்பும் கணேசன் கூறியபடி வாலிபர் வாழ்வில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தனது பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வாலிபர் புனலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சர்கிள் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீசார் கணேசனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மந்திரவாதம் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வழிகாட்டுவதாக கூறி பலரிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலி மந்திரவாதி கணேசனை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்