டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி: 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி அரை இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது.

Update: 2021-08-03 03:28 GMT

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது.

போட்டியின் முதல் கால் இறுதியில் பெல்ஜியம் அணியின் லுப்பர்ட் 2வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கோல் கணக்கை துவக்கினார்.  இதன்பின் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து, அதனை இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்தில் கோலாக்கினார்.

இதனால் போட்டி 1-1 என சமநிலை பெற்றது.  அடுத்த நிமிடத்தில், இந்தியாவின் அமித் ரோகிதாஸ் அடித்த பந்து, மன்தீப் சிங்கிடம் சென்றது.  அதனை அவர் கோலாக்கினார்.  இதனால், முதல் கால் இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின் 2வது கால் இறுதி நடந்தது.  இதில் போட்டியின் 19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அலெக்சாண்டர் ஹெண்டிரிக்ஸ் அடித்த கோலால் 2-2 என ஆட்டம் சமன்பெற்றது.  2வது கால் இறுதி முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து நடந்த போட்டியில் 33வது மற்றும் 36வது நிமிடங்களில் இந்திய அணியினர், எதிரணி பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக விளையாடினர்.  எனினும் தடுப்பு அரணாக இருந்து கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் அணி தடுத்தது.

இதன்பின் 39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.  எனினும், ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோலாகவில்லை.  இந்நிலையில், போட்டியின் 49வது, 53வது மற்றும் 59வது நிமிடங்களில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தன.  இதனால் போட்டி முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்