புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையை மேற்குவங்கம் சரியாக கையாளவில்லை - மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையை மேற்குவங்கம் சரியாக கையாளவில்லை என்று மும்பை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மும்பை,
கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் கடந்த மே மாதம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன்படி மராட்டியத்தில் சிக்கி தவித்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்கள்.
அவர்களின் வசதிக்காக ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில், மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான மேற்கு வங்க தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக மும்பை ஐகோர்ட்டில் ஒரு தொழிற்சங்க அமைப்பு சார்பில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் காயத்ரி சிங், மராட்டியத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் இல்லை என்று அரசாங்கம் சொல்வது தவறானது. இன்னும் 56 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருமபுகிறார்கள். இவர்களில் பலர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்றார்.
அப்போது இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேற்கு வங்கத்தின் நிலைமை உங்களுக்கு தெரியுமா? அங்குள்ள மாநில அரசாங்கம் ஒரு கட்டத்தில் தங்கள் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்திற்குள் வரக் கூட அனுமதிக்கவில்லை. நாங்கள் யாருக்கும் எதிராக எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அங்குள்ள நிலைமை சரியாக கையாளப்படவில்லை என்று தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா கூறினார்.
மராட்டிய அரசு சார்பில் ஆஜரான அட்வ கேட் ஜெனரல் ஆசுதோஷ் கும்பகோனி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான இதுபோன்ற ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக மராட்டிய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. அந்த வழக்கு விசாரணை வருகிற 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
இதை கருத்தில் கொண்டு மும்பை ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.