லாரி உரிமையாளர்கள்-டிரைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள்- டிரைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-07-15 01:30 GMT
திருவாரூர்,

சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.

சங்கத்தின் தலைவர் சின்னராஜ், பொருளாளர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேன் ஒட்டுனர் சங்கத்தின் செயலாளர் செந்தில், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் மணி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காலாவதியான டோல் கேட்களை மூட வேண்டும்.

டிரைவர்களுக்கு பேரிடர் கால நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் பேரிடர் இழப்பு வழங்க வேண்டும். பழைய வாகனங்களின் உரிமம் ரத்தை கைவிட வேண்டும்.

வாகன கடன்களுக்கான மாத தவணை வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் மன்னார்குடி நகர அனைத்து கார்,ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பஸ் நிலைய அண்ணா தொழிற்சங்க தலைவர் கேசவன் தலைமை தங்கினார்.

இதில் பஸ் நிலைய அண்ணா தொழிற்சங்க செயலாளர் தமிழ்செல்வம், அரசு மருத்துவமனை காந்தி ரோடு கார்,வேன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க தலைவர் மாசிலாமணி, செயலாளர் முரளி, உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்