கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத மார்க்கெட்டுகளுக்கு ‘சீல்’ - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத மார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் எச்சரித்து உள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காய்-கனி, மளிகைக்கடைகள், இறைச்சி- மீன் கடைகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அங்காடி மேலாண்மை குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் அம்மா மாளிகையில் நடந்தது.
கூட்டத்துக்கு பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 81 முக்கிய இடங்களில் மார்க்கெட்டுகள் செயல்படுகின்றது. இங்கு கொரோனா பரவல் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து வியாபார சங்க பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது.
சந்தை ஒழுங்குப்படுத்துதல் குழு மூலம் சென்னையில் உள்ள மார்க்கெட்டுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு குழுவுக்கு 2 முதல் 3 மார்க்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினந்தோறும் அனைத்து மார்க்கெட்டுகளிலும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
ஏதேனும் விதிமீறல்களில் ஈடுபட்டால் அந்த மார்க்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டால் அந்த மார்க்கெட் ‘சீல்’ வைக்கப்படும். அனைத்து மார்க்கெட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 2-வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மிக குறைவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, மாநகராட்சி இணை கமிஷனர் பி.மதுசுதன் ரெட்டி, துணை கமிஷனர்கள் மேகநாத ரெட்டி, குமாரவேல் பாண்டியன், வட்டார துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தூய்மை பணியில் மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுக்கு மாதச்சம்பளத்துடன் ரூ.2,500 ஊக்கத்தொகை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சியில் பணியாற்றும் 510 அலுவலக உதவியாளர்களுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 260 அலுவலக உதவியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வழங்கினார். மீதமுள்ள உதவியாளர்கள் அனைவருக்கும் மளிகைப் பொருட்கள் படிப்படியாக வழங்கப்படும்.