கடனை வசூலிப்பதில் கெடுபிடி: தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கடனை வசூலிப்பதில் கெடுபிடி காட்டும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-07-14 04:35 GMT
கரூர்,

கொரோனா ஊரடங்கால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. புகார் பெட்டியில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுபேதார் தலைமையில் வந்தவர்கள், புகார் பெட்டியில் போட்ட மனுவில், கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் உள்ளனர். இதனால் வங்கிக்கடன், சுய உதவிக்குழு கடன்கள், சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்களின் கடன் ஆகியவற்றை உடனடியாக கேட்டு துன்புறுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதை மீறும் விதமாக தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் கடனை வசூலித்து வருகின்றனர். எனவே தவறு செய்யும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

கரூர் மாவட்டம், வேப்பங்குடியை சேர்ந்த பொதுமக்கள் போட்ட மனுவில், எங்கள் ஊரில் அரிமாரியம்மன், பகவதியம்மன், அலகாமலை பெரியசாமி, மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா நடத்தி வந்தோம். இந்நிலையில் சிலர் தூண்டுதலின்பேரில் கோவிலில் உரிமையும், பங்கும் இல்லை என கூறி 30 குடும்பங்களை சாமிகளை வழிபட கூடாது என ஒதுக்கி வைத்துள்ளார்கள். எனவே எங்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும், எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கரூர் இந்து மக்கள் கட்சி சார்பில் போட்ட மனுவில், இந்துக்கள் வணங்கி வரும் முருகபெருமானையும், கந்தசஷ்டி பாடல் புத்தகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். பாப்பக்காபட்டியை சேர்ந்த பரமேஸ்வரி போட்ட மனுவில், மாற்றுத்திறனாளியான எனக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை அதிகப்படுத்தி தருவதற்கு, உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையில் மருத்துவச்சான்று பதிவு செய்து புதுப்பித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்