நிலத்தில் நீர்ப்பாசன வசதிக்காக மின்இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-07-13 23:45 GMT
அணைக்கட்டு,

ஒடுகத்தூர் அருகே நிலத்தில் நீர்ப்பாசன வசதிக்காக மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை மின்வாரிய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

இளநிலை மின்வாரிய பொறியாளர்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த தேவிசெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 53). இவர், 4 ஆண்டுகளாக வேப்பங்குப்பம் மின்வாரியத்துறை அலுவலகத்தில் இளநிலை மின்வாரிய பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். ஊனைப்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்நாத் என்ற விவசாயி அரிமலை அருகே 4 ஏக்கர் நிலம் வைத்துள்ளார்.

அவர், அந்த நிலத்தில் நீர்ப்பாசன வசதிக்காக மின்இணைப்பு பெற ஜெய்சங்கரை நாடினார். அதற்கு அவர் ஏதோ காரணத்தைக்கூறி காலதாமதம் செய்து வந்தார். பிரேம்நாத் தொடர்ந்து வலியுறுத்தவே, மின்இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என ஜெய்சங்கர் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், ஜெய்சங்கர் மீது 11-ந்தேதி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை 9 மணியளவில் வேப்பங்குப்பம் வந்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.5 ஆயிரத்தை விவசாயியிடம் கொடுத்து, அதை ஜெய்சங்கரிடம் வழங்குமாறு கூறி அனுப்பி விட்டு, அங்கு போலீசார் மாறுவேடத்தில் இருந்தனர்.

கைது

பிரேம்நாத், லஞ்சப்பணத்தை ஜெய்சங்கரிடம் கொடுத்தபோது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினிகாந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து இளநிலை மின்வாரிய பொறியாளர் ஜெய்சங்கரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து 7 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்