2014 தேர்தலில் வெளியில் இருந்து ஆதரிப்பதாக கூறியது பாரதீய ஜனதாவிடம் இருந்து சிவசேனாவை பிரிக்க அரசியல் தந்திரம் சரத்பவார் ஒப்புதல்
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொங்கு சட்டசபை உருவானது.;
மும்பை,
2014-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தான் கூறியது பாரதீய ஜனதாவிடம் இருந்து சிவசேனாவை பிரிக்க செய்த அரசியல் தந்திரம் என்பதை சரத்பவார் ஒப்புக்கொண்டுள்ளார்.
2014 சட்டசபை தேர்தல்
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொங்கு சட்டசபை உருவானது. அந்த தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணியை முறித்து தனித்து போட்டியிட்டன.
தேர்தல் முடிவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்த பாரதீய ஜனதாவுக்கு உதவ சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது. பாரதீய ஜனதாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருந்தது.
பலன் அளிக்கவில்லை
ஆனாலும் அப்போது சரத்பவாரின் இந்த அறிவிப்புக்கு பலன் இல்லாமல் போனது. பாரதீய ஜனதாவுடன் மீண்டும் சேர்ந்து நட்பை புதுப்பித்து கொண்ட சிவசேனா ஆட்சியிலும் இணைந்தது.
தற்போது, மாநிலத்தில் பாரதீய ஜனதாவுடனான உறவை துண்டித்து கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
இந்தநிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு சரத்பவார் அளித்த பேட்டியில், 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாவுக்கு என்ன காரணத்துக்காக தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தது என்பது குறித்து விளக்கம் அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
சிவசேனாவை பிரிக்க தந்திரம்
2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் மீண்டும் இணைவதை நான் விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கலாம் என உணர்ந்ததன் காரணமாக வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தேன்.
ஆனால் அதற்கு பலன் கிட்டவில்லை. சிவசேனா மீண்டும் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து விட்டது. அந்த கூட்டணி அரசாங்கம் 5 ஆண்டுகளையும் நிறைவு செய்தது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த அனுமதிப்பது சிவசேனா மற்றும் மற்ற கட்சிகளின் நலனுக்கு உகந்ததல்ல என்பதை அறிவேன். பாரதீய ஜனதா அல்லாத மற்ற கட்சிகளுக்கு ஜனநாயக அமைப்பில் செயல்படுவதற்கு உரிமை உண்டு என்பதை பாரதீய ஜனதா நம்பாது. மற்ற அனைத்து கட்சிகளும் ஆபத்தை எதிர்கொள்வதை நான் அறிவேன். வெளியில் இருந்து ஆதரவளிப்பாக கூறியது அரசியல் தந்திரம்.
அப்போது பாரதீய ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான பிளவை அதிகமாக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.