சாத்தான்குளம் சம்பவம்: சி.பி.ஐ.யிடம் தடயவியல் ஆவணங்கள் ஒப்படைப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தடயவியல் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2020-07-13 22:45 GMT
நெல்லை,

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தடயவியல் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.

தந்தை-மகன் கொலை

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் அழைத்துச்சென்று தாக்கி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர். மேலும் வழக்குக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தடயங்களையும் சேகரித்து வந்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் அடங்கிய குழுவினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்த ஆவணங்களை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 நாட்களாக விசாரணை

இதற்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிகமாக அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இருந்து சாத்தான்குளத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல் நாளில் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் 2-வது நாளாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தி, கோர்ட்டில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தடயவியல் ஆவணங்கள் ஒப்படைப்பு

இந்த கொலை வழக்கில் தடயவியல் ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆரம்பத்தில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதில் கவனம் செலுத்தி பல்வேறு தடயவியல் ஆவணங்களை சேகரித்து இருந்தனர்.

நேற்று சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தடயவியல் ஆவணங்களின் தொகுப்பை பைகளில் எடுத்து கொண்டு நெல்லை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து அவற்றை ஒப்படைத்தனர். பின்னர் சிறிது நேரம் அந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். அவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்து பெற்றுக் கொண்டனர். இதையடுத்து மாலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரைக்கு தனித்தனி குழுவாக கார்களில் புறப்பட்டு சென்றனர். இதனால் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது.

வழக்கு தள்ளிவைப்பு

இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 2 கொலை வழக்குகளுக்கும் தனித்தனியாக ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி லோகேசுவரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளையும் அவரது வக்கீல் வாபஸ் பெற்றார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்காக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை ஜாமீன் மனு கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விசாரணை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்