வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணி கைதி பிடிபட்டார் பெண் சிறை காவலர் பணியிடை நீக்கம்

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணி கைதி கும்மிடிபூண்டியில் பிடிப்பட்டார்.

Update: 2020-07-12 22:50 GMT
வேலூர், 

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணி கைதி கும்மிடிபூண்டியில் பிடிப்பட்டார். இது தொடர்பாக பெண் சிறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கட்டிட மேஸ்திரி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (33) என்பவரும் கடந்தசில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கிருஷ்ணவேணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருடன் (25) பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சுரேசுடன் பேசுவதை கிருஷ்ணவேணி தவிர்த்து வந்தார். சுரேஷ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் கிருஷ்ணவேணி கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி அஜித்குமாருடன் சேர்ந்து அவரை கொலை செய்தார். இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

சென்னை கும்மிடிப்பூண்டியில் பதுங்கிய கிருஷ்ணவேணி அதே பகுதியைச் சேர்ந்த கோபியை (28) திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணி கடந்த மே மாதம் ஆரணிக்கு வந்தபோது போலீசார் அவரை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 5-ந் தேதி கிருஷ்ணவேணி மற்றும் அஜித்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

7 மாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணியின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி குறைவால் கடந்த 7-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் குளியலறைக்கு சென்ற அவர் மாற்றுச்சேலை அணிந்து அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதேபோல் சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவின்பேரில் 5 ஆண் சிறை காவலர்கள், 5 பெண் சிறை காவலர்கள் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 5 தனிப்படையினரும் ஆரணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.

கர்ப்பிணி கைதி பிடிபட்டார்

நேற்று மாலை 6.30 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் கணவர் வீட்டில் பதுங்கியிருந்த கிருஷ்ணவேணியை சிறை காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். அவரை, அங்கிருந்து வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி செல்ல உதவியது யார்? கும்மிடிப்பூண்டிக்கு சென்றது எவ்வாறு? என்பது குறித்து வேலூருக்கு வந்த பின்னர் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கிருஷ்ணவேணி மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2-ம் நிலை பெண் சிறைகாவலர் கலாவதியை பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்