கொரோனா சிகிச்சை மையமாக தனியார் மருத்துவமனையை மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீரங்கத்தில் கொரோனா சிகிச்சை மையமாக தனியார் மருத்துவமனையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-07-12 03:10 GMT

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி, சமுதாய கூடங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்ரீரங்கம் காந்திரோடு கிழக்கு ரெங்கநாதபுரத்தில் உள்ள ஜி.வி.என். மருத்துவமனையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதாக தகவல் பரவியது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அந்த மருத்துவமனை முன் திரண்டு முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் கூடியிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குடியிருப்பு பகுதியின் நடுவில் மருத்துவமனை அமைந்து இருப்பதாலும், மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் செல்ல வசதி இல்லாததாலும், காற்று வழியாக அனைவருக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், இங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கக்கூடாது என்று கூறினார்கள். மேலும் இங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த தெருவில் இதுநாள் வரை கொரோனா தொற்று இல்லாமல் உள்ளது.

எனவே இப்பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்று கூறி அந்த மனுவின் நகலை போலீஸ் உதவி கமிஷனரிடம் கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்