பிரபல ரவுடி விகாஷ் துபே சுட்டுக்கொலை: போலீசை கொல்ல துணிபவர்களுக்கு பாடம் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கருத்து
பிரபல ரவுடி விகாஷ் துபேயை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதற்காக அந்த மாநில போலீசாருக்கு மும்பையை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மும்பை,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் துபேயை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதற்காக அந்த மாநில போலீசாருக்கு மும்பையை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். போலீசை கொல்ல துணிபவர்களுக்கு பாடம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ரவுடி சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற பிரபல ரவுடி விகாஷ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரபிரதேச போலீசாரின் இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கைக்கு மும்பையை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மும்பையில் சுமார் 100 ரவுடிகளை என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தியதாக புகழப்படும் முன்னாள் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா கூறியதாவது:-
கேள்வி எழுப்பக் கூடாது
இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு உத்தரபிரதேச போலீசாரை நாம் வாழ்த்த வேண்டும். இது ஒரு உண்மையான என்கவுண்ட்டர். ஏனெனில் இதில் 4 போலீசாரும் காயமடைந்துள்ளனர்.
8 போலீசாரை கொன்றவர் சரியான தண்டனையை பெற்று இருக்கிறார். சம்பவம் நடந்த இடத்தில் மழை பெய்தது. அவரை ஏற்றிச்சென்ற வாகனம் சறுக்கியது. அதன்பிறகு விகாஷ் துபே ஒரு போலீஸ்காரரின் ஆயுதத்தை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை போலீஸ் படையின் மனஉறுதியை அதிகரிக்கும். இந்த என்கவுண்ட்டர் குறித்து யாரும் எந்த கேள்வியும் எழுப்பக் கூடாது. யாராவது அவ்வாறு செய்தால், அவர்கள் முதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 8 போலீசாரின் குடும்பங்களை சந்திக்க வேண்டும். போலீசார் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர்கள் எங்கே சென்றார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளிகளுக்கு பாடம்
உதவி போலீஸ் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற மும்பையின் மற்றொரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான பிரபுல் போஸ்லே கூறுகையில், “உத்தரபிரதேச போலீசாரின் இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கை மிகவும் தேவை. போலீசாரை யாரும் கொல்ல துணியக்கூடாது. போலீசார் தங்களது கடமையை செய்கின்றனர். அவர்களை குற்றவாளிகள் எதிர்க்க கூடாது. இந்த என்கவுண்ட்டர் போலீசாரை கொல்ல துணிபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். இல்லையெனில் குற்றவாளிகளுக்கு போலீசார் மத்தியில் எந்த பயமும் இருக்காது” என்றார்.
விகாஷ் துபே என்கவுண்ட்டர் போலீஸ் படையின் மனஉறுதியை அதிகரிக்கும் என்றும், அவரை போன்ற குண்டர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அவர்கள் சமூகத்தின் அரக்கர்கள் என்றும் ஓய்வு பெற்ற உதவி போலீஸ் கமிஷனர் பரத் ஷெல்கே தெரிவித்தார்.